கூட்டு பலாத்காரம்: மணிப்பூரில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம்

2 mins read
8b8bcb0f-1ecc-45fa-bda5-4aa2237730a1
ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பெண்கள் - இந்திய ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. மூன்று மாதங்கள் கடந்தும் கலவரம் இன்னும் ஓயவில்லை.

இதனிடையே மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இந்தப் பரபரப்பான சூழலில் மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடந்த கலவரத்தின்போது சூரச்சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 37 வயது பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்த பிறகே இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது மணிப்பூரில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெள்ளிக்கிழமையன்று மணிப்பூரில் மெய்தி இனப் பெண்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், பிஷ்ணுபூர், காக்சிங் மற்றும் தவுபால் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மெய்தி பெண்கள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதமேந்திய போராளிகள் மற்றும் மியன்மாரில் இருந்து ஊடுருவியவர்களால் பெண்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்கள் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சாட்டினர்.

குறிப்புச் சொற்கள்