புதுடெல்லி: பாப்புலர் ஃபிரான்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு நாட்டில் சமய மோதலை ஏற்படுத்தி அமைதியைச் சீர்குலைப்பதாகப் புகார் எழுந்தது.
தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது.
அதன்படி கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரியில் உள்ள கிரீன்வேலி அகாடமியை என்ஐஏ அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு முடக்கினர். பிஎப்ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி மையங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரளாவில் முடக்கப்பட்ட 6வது ஆயுத பயிற்சி மையம் இதுவாகும்.

