இடைவிடாத மழை: இமாச்சலப் பிரதேசத்தில் 24 பேர் மரணம்

1 mins read
f33079dc-8f0c-4890-9afc-5188b2fc3b4d
சோலான் மாவட்டத்தில் உள்ள ஜாடோன் கிராமத்தில் உருக்குலைந்த வீடுகள். - படம்: ஏஎஃப்பி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் 24க்கும் மேற்பட்டார் உயிரிழந்துவிட்டனர்.

மாநிலம் முழுவதும் வீடுகள் இடிந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியும் 15 பேர் உயிரிழந்த நிலையில் தலைநகர் சிம்லாவில் சிவன் கோயில் ஒன்று இடிந்ததில் 9 பேர் மாண்டனர்.

மாநிலத்தில் திடீரென்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பல இடங்களில் 55 மணி நேரமாக ஒரு நிமிடம்கூட விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

அங்குள்ள மண்டி, சிர்மவுர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பல வீடுகள் இடிந்துவிட்டன.

முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிலம் முழுக்க உள்ள 800க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துவிட்டதால் 2,000க்கும் மேற்பட்ட பேருந்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாகவும் ஆபத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மாநிலத்தில் இப்போதுதான் முதல்முறையாக அதிகமான மேகவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து பலத்த உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக அதிகாரி பிரவீன் பரத்வாஜ் தெரிவித்தார்.

சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்ட மாநில முதல்வர் சுக்விந்தர் சிங், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்