தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதியில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது

2 mins read
0b6f2b5c-c84b-4301-92eb-d1951825bc94
பிடிபட்ட பெரிய சிறுத்தை. கொல்லப்பட்ட சிறுமி. - படம்: இந்திய ஊடகம்
பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக வனப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக வனப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆறு வயது சிறுமியை கொன்ற சிறுத்தை திங்கட்கிழமை காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறுத்தை தூக்கிச் சென்று கடித்துக் குதறியது. சம்பவத்தில் சிறுமி உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க மலைப்பாதை அருகே கூண்டுகளையும் அதைக் கண்காணிக்கும் பொருட்டு 30 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களையும் பொருத்தி இருந்தனர்.

திங்கட்கிழமை அதிகாலையில்  லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் பெரிய சிறுத்தை சிக்கியது. 

ஜூன் 24ஆம் தேதி கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கெளசிக் என்ற 4 வயது சிறுவன் பெற்றோருடன் திருப்பதி நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது.

பக்தர்களும் காவல் துறையினரும் துரத்தியதால் அது சிறுவனை வனப்பகுதியில் விட்டுச் சென்றது. அந்த சிறுவன் மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.  கௌசிக்கை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் அதனை பாக்கராபேட்டை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

ஆனால், அதன் தாய் சிறுத்தை அதே பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த லஷிதாவை கண் இமைக்கும் நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தாக்கி கவ்வி சென்றது. பிடிபட்ட சிறுத்தை பெரியதாக உள்ளதால் அது ஏற்கனவே பிடிக்கப்பட்ட குட்டி சிறுத்தையின் தாயாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தச் சிறுத்தையை பத்திரமாக அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறுமியைத் தாக்கிய சிறுத்தை பிடிபட்டதால் பக்தர்கள், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்லத் தடை விதித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருமலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி மலைக் காட்டில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. திருப்பதி திருமலை இடையே உள்ள சாலைகள், பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் வழித்தடங்கள் ஆகியவற்றின் அருகே சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமலை வனப்பகுதியில் நடமாடும் விலங்குகளால் பாதயாத்திரை செல்வோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களை சிறுத்தைகள் இழுத்துச் செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்