ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசின் கையை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சி முனைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திங்கட்கிழமை முதல் 15 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பலத்தை நிரூபிக்க கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இத்தேர்தல்கள் கருதப்படுவதால் ஆளும் பாஜகவும், ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளன.
மல்லிகார்ஜூன கார்கே தனது தேர்தல் பரப்புரையை நேற்று திங்கட்கிழமை சத்தீஸ்கரில் இருந்து தொடங்கினார்.
அம்மாநிலத்தில் உள்ள ஜான்ஜ்கிர்ரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து 18ஆம் தேதி தெலுங்கானாவிலும், 22ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலும், 23ஆம் தேதி ராஜஸ்தானிலும் நடைபெற உள்ள பேரணிகளில் கார்கே பங்கேற்கிறார்.
சுற்றுப் பயணத்தின்போது, அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்தும் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார்.