புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், 11 பேர் குழு அமைத்தல், ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இம்மாதம் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, இடது சாரிகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்தக் குழுவில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல்), சீதாராம் யச்சூரி (மா.கம்யூ) ஆகியோர் இடம்பெறலாம்.
மாநிலம் வாரியாக தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் மும்பையில் நடக்கும் விரிவான ஆலோசனைக்கு பிறகுதான் ஒருங்கிணைப்பாளரை முடிவு செய்ய முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இவ்விவகாரத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

