உணவு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மோடி உறுதி

உணவு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மோடி உறுதி

2 mins read
81dcf7ae-993e-4108-990b-f57197f733e1
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிறகு தேசிய சாரணர் படையினரைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: உணவுப்பொருள் விலைகள் தொடர்ந்து கூடிவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்குச் சென்ற ஜூலை மாதம் சில்லறைப் பணவீக்கம் ஏற்றம் கண்டது.

இந்நிலையில், “பணவீக்கம் ஏற்படுத்தியுள்ள சுமையைக் குறைக்க அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. உறுதியாக அதனைச் செய்வோம். எங்களது நடவடிக்கைகள் தொடரும்,” என்று டெல்லி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையின்போது மோடி கூறினார்.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அதிலும் வென்று ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தக்கவைக்க மோடியின் பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது.

ஆயினும், விலைவாசி உயர்வும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பும் அக்கட்சி தீர்வுகாண வேண்டிய முக்கியப் பிரச்சினைகளாக இருந்து வருகின்றன.

உணவுப்பொருள் சார்ந்த விலையேற்றமானது இந்திய அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே பிரச்சினையாக இருந்து வருகிறது.

உலகில் மக்கள்தொகை மிகுந்த நாடான இந்தியாவில் வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் தோற்றுப்போன நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலுக்குமுன் இந்திய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்புகளை மோடி பரிசீலிக்கலாம் என்றும் பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தது. இதனால் பலரது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் விளைவு தேர்தலில் எதிரொலிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

‘மணிப்பூரில் அமைதி திரும்புகிறது’

இதற்கிடையே, வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அங்கு வெடித்த இனக் கலவரத்தால் குறைந்தது 180 பேர் மாண்டுவிட்டனர்.

இந்நிலையில், “மணிப்பூரில் அமைதி திரும்புவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடே மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது,” என்று மோடி குறிப்பிட்டார்.

நாட்டுக்கு உரையாற்றுவதற்கு முன்பு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி
நாட்டுக்கு உரையாற்றுவதற்கு முன்பு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்