புதுடெல்லி: நாட்டில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது.
பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்ளாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, “காங்கிரஸ் கட்சித் தலைவர் இங்கு நடக்கும் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியது இருந்தது. அமைச்சர்கள் உள்ளிட்ட பலரால் செங்கோட்டையை எளிதாகச் சென்றுசேர முடியவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் காணொளிச் செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “கடந்த சில ஆண்டுகளில்தான் நாடு முன்னேற்றம் அடைந்ததாக சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதில் துளிகூட உண்மையில்லை.
“வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும்போது ஒரு துரும்புகூட இங்கு இல்லை. அதற்குப் பிறகு ஜவகர்லால் நேருவின் முன்னெடுப்பால் இரும்பு எஃகு ஆலைகளும் அணைகளும் உருவாக்கப்பட்டன.
“ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவை நிறுவப்பட்டன. இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்து நாட்டை தன்னிறைவுபெறச் செய்தனர்.
“நாட்டில் சிலர் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜீவ் காந்தி துணிச்சலுடன் தொலைத்தொடர்புப் புரட்சியை கொண்டுவந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்றைக்கோ ஜனநாயகம், அரசியலமைப்பு, தன்னாட்சி அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனை நான் வேதனையுடன் இங்கு பதிவு செய்கிறேன். அலமலாக்கத்துறை, வருமானவரித் துறைகள், சிபிஐ ஆகிய அரசு முகவைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்படுகின்றன.
“தேர்தல் ஆணையத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடந்துவருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்கள் முடக்கப்படுகின்றன. சிறந்த மனிதர்கள் கடந்தகால வரலாறுகளை அழிப்பதில்லை, மாறாக தனக்கென புதிய வரலாறுகளை உருவாக்குகிறார்கள்,” என்று கார்கே பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

