இந்தியா முழுவதும் 9.86 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை

இந்தியா முழுவதும் 9.86 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை

2 mins read
e2d9e1ce-6ad7-4f2e-9bd7-59c1465e961f
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 லட்சத்து 86 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசாங்கம் நியமித்த குழு ஒன்று தெரிவித்து உள்ளது.

எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 62 லட்சத்து 72 ஆயிரத்து 380 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 2022-23 கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி 9,86,585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி, மகளிர், இளையர் மற்றும் விளையாட்டுத் துறைகளின் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கி உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் தாக்கூர் தலைமையிலான இந்த நிலைக்குழு நாடு முழுவதிலும் 2022 - 2023 கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காலியாக உள்ள 9,86,585 பணியிடங்களில் 7,47,565 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் 1,46,334 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் 92,666 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மீதான தனது கருத்துகளை நாடாளுமன்ற நிலைக்குழு முன்வைத்தது.

காலியிடங்களை உடனடியாக நிரப்பினால்தான் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் விகிதத்தை விரைந்து அமலாக்க முடியும் என அது கருத்து கூறியுள்ளது.

“ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப்படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து, நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்,” என நிலைக்குழு தெரிவித்துள்ளது.

கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை என மத்திய அரசு கூறியிருந்தது.

இதை ஏற்க மறுத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்