மும்பை: இந்தியாவில் அண்மையில் வெளியீடு கண்ட திரைப்படங்கள் சில முஸ்லிம் மக்களை இழிவுபடுத்துவதுபோல இருப்பதாகவும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்களிடையே அச்சத்தைப் பரப்புவதுபோலத் தெரிவதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவின் ஆளும் கட்சிக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் கலாசாரப் பிரசாரத்தில் பாலிவுட் ஈடுபடும் சந்தேகத்தை ‘கேரளா ஸ்டோரி’ போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தி இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
‘கேரளா ஸ்டோரி’ என்னும் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து சமயப் பெண் ஒருவர் இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்டு தீவிரவாத சித்தாந்தத்திற்கு உட்படுத்தப்படுவதுபோல சித்திரிக்கப்பட்ட அந்தப் படம் இவ்வாண்டு வெளியான பாலிவுட் படங்களில் இரண்டாவது பெரிய திரைப்படமாகக் கருதப்படுகிறது.
ஆனால், இந்தப் படமும் அண்மையில் வெளியிடப்பட்ட மேலும் சில படங்களும் பொய்களைப் பரப்பி பிரிவினையைத் தூண்டுவதோடு இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவதாக விமர்சகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக தமது ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை எல்லாக் கட்சிகளும் பயன்படுத்தலாம் என அந்தப் படத்தின் இயக்குநரான சுதிப்டோ சென், ஏஎஃப்பி செய்தியாளரிடம் கூறினார்.

