புவனேஷ்வர்: இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் முதலை ஒன்று ஒரு பெண்ணை உயிருடன் விழுங்கியது. இச்சம்பவம் புதன்கிழமையன்று ஒடிஷாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாட்பூர் எனும் கிராமத்தில் நிகழ்ந்தது.
பலியானவர் 35 வயது ஜியோட்ஸ்னா ராணி எனும் பெண் எனத் தெரிவிக்கப்பட்டது. பிருப்பா ஆற்றுக்கு அருகே அப்பெண் குளித்துக்கொண்டிருந்தபோது முதலை அவரை நீருக்குள் இழுத்துச் சென்று கொன்றது.
இச்சம்பவம் காணொளியில் பதிவுசெய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. காணொளி பலரால் பகிரப்பட்டது.
சம்பவத்தைப் பலர் நேரிலும் கண்டனர். பெண் முதலையால் தரதரவென்று இழுத்து செல்லப்பட்டதை அவர்கள் பார்த்தனர்.
பின்னர் மீட்புப் பணியாளர்கள் மாண்ட பெண்ணின் உடலை ஆற்றிலிருந்து மீட்டனர்.