தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரத் பவாரை இழுக்க அஜித் பவார் முயற்சி

2 mins read
e04491a2-15a0-4b65-81ee-81ff4ce83ce5
சரத் பவார் மற்றும் அஜித் பவார் - படங்கள்: இந்திய ஊடகம்

மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இழுக்க துணை முதல்வர் அஜித் பவார் முயற்சி செய்து வருகிறார் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறியுள்ளனர்.

சரத் பவாரின் நெருங்கிய உறவினர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். அவருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சரத் பவாரை, அஜித் பவார் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வாடேட்டிவார் கூறியதாவது:

“தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரத் பவாரைக் கொண்டு வரவேண்டும் என்று துணை முதல்வர் அஜித் பவாருக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது. அதனால்தான் சரத் பவாரை, அடிக்கடி சந்தித்து வருகிறார் அஜித் பவார்.

“மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவி வேண்டுமானால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரத் பவார் வரவேண்டும் என்றும், அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என்றும், சரத் பவாருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்றும் அஜித் பவாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறும்போது, “எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. இந்த விவகாரம் குறித்து தலைவர் சரத் பவார் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார். மேலும், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஊகங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை,” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கூறும்போது, “இரண்டு நாள்களுக்கு முன்பு, சரத் பவாருக்கு பாஜகவில் மத்திய அமைச்சர் பதவி தருவதாக அழைப்பு விடுக்கப்பட்டது என்று நான் கூறியிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து இந்தத் தகவல் எனக்கு வந்தது. ஆனால் இது உண்மையா பொய்யா என்று நான் தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை,” என்றார்.

சிவசேனா கட்சி எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான (உத்தவ் பிரிவு) சஞ்சய் ராவத் கூறும்போது, “சரத் பவாருக்கு மத்திய அமைச்சர் பதவி போன்ற சலுகைகளைத் தர அஜித் பவார் யார்? இதுபோன்ற பதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறுவதற்கு அஜித் பவாருக்குத் தைரியம் கிடையாது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்