‘மணிப்பூரில் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களுக்கு தனி உயர் அதிகாரிகள் தேவை’

‘மணிப்பூரில் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களுக்கு தனி உயர் அதிகாரிகள் தேவை’

2 mins read
daf4eac0-50d3-4f70-ac6a-8a0b8add45a6
ஐந்து மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்ய தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நிகரான உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று குகி ஸோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் மாவட்டங்களுக்கு தனித் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு குகி ஸோ சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மணிப்பூரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களளில் பத்துப் பேர் குகி ஸோ இனத்தவர்கள். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

அதில், சுராசந்த்பூர், கான்க்போக்பி, சாந்தேல், தென்நவுபால், பெர்சாவ்ல் ஆகிய ஐந்து மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்ய, தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நிகரான உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், “இம்பால் பள்ளத்தாக்கு எங்களுக்கு மரணப் பள்ளத்தாக்காக மாறியுள்ள நிலையில், குகி ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், எம்சிஎஸ் (மணிப்பூர் குடிமைப்பணி) மற்றும் ஐபிஎஸ், எம்பிஎஸ் (மணிப்பூர் காவல் பணி) அதிகாரிகள் இம்பால் பள்ளத்தாக்குக்கு மாறிவிட்டதால் அவர்களால் தங்களின் கடமையினைச் செய்யமுடியாமல் போனது.

இதனால் குகி ஸோ பழங்குடியின அரசு அதிகாரிகள் சந்திக்கும் இந்தச் சிக்கலை தீர்க்கவும், மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் அல்லது அதற்கு இணையான உயர் அதிகாரம் கொண்ட பதவிகளை உடனடியாக உருவாக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் இனக் கலவரத்தால் தங்களின் வீடுகள், வாழ்வாதாரத்தினை இழந்த குகி ஸோ பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 விழுக்காட்டினர் மைத்தேயி இனத்தையும், 40 விழுக்காட்டினர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள்.

பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியினத்தவர்க்கான தகுதி கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரச் சம்பவங்களில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

குறிப்புச் சொற்கள்