திருப்பதி: ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் 17 வயது மாணவி ஒருவர் தான் பழகிய இரண்டு நண்பர்களையும் காதலித்தார்.
அவ்விருவரில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். கடைசியில் அந்த மாணவியின் லீலைகள் சோகத்தில் முடிந்தன. இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை பல விவரங்களை வெளியிட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாய்குமார், 23, சூரிய பிரகாஷ், 25 இருவரும் நண்பர்கள்.
அதே நகரைச் சேர்ந்த அந்த மேல்நிலைப்பள்ளி மாணவி (இவரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை) அந்த இரண்டு நண்பர்களுக்கும் பழக்கமானார். இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து நெருங்கிப் பழகி காதல் வலை வீசி வந்தார்.
தன்னைத்தான் அந்த மாணவி காதலிக்கிறார் என்று நம்பிய சாய்குமாரும் சூரிய பிரகாஷும் இந்த விவகாரத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே தொடர்ந்து காதலில் ஈடுபட்டு வந்தனர்.
இருவரோடும் மாறி மாறி அந்த மாணவி உல்லாசமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அந்த மாணவி சாய்குமாருடன் ஹோட்டல் அறையில் தங்கினார்.
அப்போது சாய்குமார் மாணவியின் கழுத்தில் தாலி கட்டினார். அதை இருவரும் காணொளிப் படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சில நாள்களுக்குப் பிறகு அந்தப் படத்தை சாய்குமார் இணையத்தில் வெளியிட்டதாகத் தெரிகிறது.
அதைக் கண்ட சூரிய பிரகாஷ் பெரும் அதிர்ச்சியடைந்து மாணவியை அணுகி அது பற்றிக் கேட்டார். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அந்த மாணவி சூரிய பிரகாஷையும் காதலித்த விவகாரம் சாய்குமாருக்கும் தெரியவந்தது.
இரண்டு நண்பர்களும் அந்த மாணவியின் வீட்டிற்கு நேரே சென்று குடும்பத்தார் முன்னிலையில் கேள்வி எழுப்பினர்.
மாணவி பதில் கூற முடியாமல் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்து நிலைகுலைந்து போய்விட்டார்.
அந்தப் பதின்ம வயதுப் பெண்ணைக் கண்டித்துவிட்டு நண்பர்கள் இருவரும் அவ்வீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலையில், சில நாள்களுக்குப்பின் அந்த மாணவி திடீரென்று வீட்டிலேயே தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
இந்த விவகாரம் காவல்துறைக்குச் சென்றது. திருமண வயது வராத பெண்ணிற்குத் தாலி கட்டியதாக சாய்குமார் மீது அதிகாரிகள் குற்றப்பதிவு செய்தனர். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வேளையில், அதிகாரிகள் தன் மீது தான் அடுத்த குறி வைப்பார்கள் என்று சூரிய பிரகாஷ் பயந்துபோய்விட்டார். அவர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு ரயில் பாதையை நோக்கிச் சென்று ரயிலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவியின் காதல் லீலை கடைசியில் சோகத்தில் முடிந்தது.

