புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இதற்காக, 26 கட்சிகளின் தலைவர்கள் பாட்னா, பெங்களூருவில் இரு முறை கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டணிக்கு ‘இண்டியா’ எனப் பெயர் சூட்டி உள்ளனர்.
பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இண்டியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது. குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அங்கு அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடந்தது.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு மூத்த தலைவர் அல்கா லம்பா கூறும்போது, டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். இந்த அறிவிப்பு இண்டியா கூட்டணி நியதியை மீறுவதாக ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்படுவதாக தகவல்கள் குறிப்பிட்டன.
இண்டியா கூட்டணித் தலைவர்கள் அடுத்த கட்டமாக இந்த மாத இறுதியில் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அடுத்த ‘இண்டியா’ கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வோமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்,” என்றாரவர்.
ஏற்கனவே மத்திய அரசின் டெல்லி சேவைகள் திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே அண்மைய காலமாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய பிரச்சினை தலைதூக்கி உள்ளது.

