மேட்டூர்: கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வியாழக்கிழமை மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அன்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்திலிருந்து தமிழகப் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த 10 நாள்களாக தமிழகத்துக்கு தினசரி வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.
கடந்த இரு நாள்களாக கர்நாடக அணைகளில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டிஎம்சி வரை தண்ணீர் வழங்கத் தயார் என கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீர் வியாழக்கிழமை காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 552 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,260 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

