சிஏஜி அறிக்கைக்கு அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம்

சிஏஜி அறிக்கைக்கு அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம்

2 mins read
fbae7783-b463-4eab-a803-33c792309228
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார் நிதின் கட்காரி.

“துவாரகா விரைவுச் சாலை என்பது சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல் 29 கிலோ மீட்டர் இல்லை, அது மொத்தம் 230 கிலோ மீட்டர். அதன்படி ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 9.5 கோடி செலவழிக்கப்பட்டது.

“சிஏஜி அதிகாரிகளிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதிகாரிகளும் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் அவர்கள் அறிக்கையில் 29 கிலோ மீட்டர் என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்” என்றார் நிதின் கட்காரி.

துவாரகா விரைவுச் சாலை டில்லி - ஹரியானாவுக்கு இடையில் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலையை உருவாக்க ரூ.251 கோடி செலவிடப்பட்டிருப்பதாக கடந்த வாரம் சிஏஜி அறிக்கை வெளியிட்டது.

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடி என்ற சராசரி தொகையைவிட இது பல மடங்கு அதிகம் என சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

சிஏஜி வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்தத் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

இதையடுத்து, இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் வியாழக்கிழமை உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாறாக, சிஏஜி-க்கு போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அமைச்சர் கட்காரி சனிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், துவாரகா விரைவுச் சாலை சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்டமைத்ததே ‘பாஜக’ தான் என்றார்.

“காஷ்மீர் - கன்னியாகுமரி விரைவுச் சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். டெல்லி - மும்பை விரைவுச் சாலை வரும் பிப்ரவரிக்குள் நிறைவு பெறும்.

“சூரத் முதல் நாசிக் வரையிலும், நாசிக்கில் இருந்து அகமதுநகர் வரையிலும் பசுமை வழிச்சாலை உருவாக்கி வருகிறோம். இது சோலாப்பூர் வரை செல்லும்.

“மியான்மார், பங்களாதே‌ஷ், பூட்டானுக்கும் நேப்பாளத்துக்கும் சாலை அமைத்து வருகிறோம்.

இனி வருங்காலங்களில் மின்வாகனங்கள் விலை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்