லக்னோ: உத்தரப் பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அகிலேஷ் யாதவின் தந்தையும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ரஜினி.
“9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவை சந்தித்தேன். அன்று முதல் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். அவ்வப்போது போனில் பேசிக் கொள்வோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். ஆனால் அவரை என்னால் சந்திக்க இயலவில்லை. எனவே இப்போது அவரை சந்திக்கிறேன்” என்று ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.
சனிக்கிழமை அன்று ரஜினி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ரஜினி யோகியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார் ரஜினி. ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாக லக்னோவில் சந்தித்தார் ரஜினி.
அண்மையில் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். தமது இமயமலை பயணத்தை முடித்துக்கொண்ட அவர், ஜார்க்கண்ட் சென்று அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். அதன் பின் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்துவிட்டு உத்தரப் பிரதேச சென்றார்.

