புதுடெல்லி: லடாக்கின் லே மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் ஒன்பது வீரர்கள் மாண்டனர்.
விபத்து தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சனிக்கிழமை நடந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
விபத்துக்குள்ளான வாகனத்தில் 10 பேர் பயணம் செய்ததாகவும் அதில் ஒன்பது பேர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு அதிபர் திரவுபதி முர்மு சமூக ஊடகம் வழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் மாண்டது வருத்தம் அளிக்கிறது. விபத்தில் காயம் அடைந்த வீரர் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் கடமைப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
உயரமான பனிப்பிரதேசங்கள், மலைக்குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகளை கொண்ட லடாக்கில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர்.
ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் வீரர்கள் தங்கள் பணியிடத்துக்கு வாகனங்கள் மூலம் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

