இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ. 200 கோடி நிதியுதவி

2 mins read
cdb90009-0422-4a31-8972-bc0a401a107e
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சேதத்தின் அளவு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

சிம்லா: இமயமலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன.

இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.

குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய அளவில் மழை பெய்தது .

மழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு, தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளன.

அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன .

வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் இமாச்சலப் பிரதேசம் கடந்த இரு மாதங்களாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

கடந்த 55 நாள்களில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

ஜூன் 24ஆம் தேதி முதல் அங்கு நிகழ்ந்த மழை தொடர்பான துயரச்சம்பவங்களில் 217 பேர் மாண்டுவிட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்கம், சேதத்தின் அளவு ரூ.10,000 கோடி என மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

“கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இங்கு வந்து பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பேரிடர் ஏற்படுத்திய இழப்பை நினைத்து வருத்தப்படுகிறேன். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என ஜே.பி. நட்டா கூறினார்.

குறிப்புச் சொற்கள்