ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார். இந்நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அந்தக் கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அங்கிருந்தவர்கள் ஓட முயன்றனர்.
அப்போது, எந்த வித பதற்றமுமின்றி முதல்வர் பூபேஷ் பாகல் அஞ்சாமல், அசராமல் நின்றார். மேலும், “கவலைப்பட வேண்டாம், பாம்பை யாரும் அடிக்கவும் வேண்டாம்,” என்றார் அவர். சிறிது நேரப் பரபரப்பிற்கு பின் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

