மங்களூர்: ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.
தமிழ் நாட்டில் அம்மனுக்கு ஆடிக் கூழ் ஊற்றிக் கொண்டாடுவதுபோல கர்நாடக மாநிலத்தில் உள்ள துளு வட்டாரத்தில் ஆடிக் களஞ்சம் கொண்டாடுகிறார்கள்.
அந்தத் திருவிழாவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் களஞ்சா என்ற வேடமிட்டு, வீதி வீதியாகச் செல்வார்கள்.
முகத்தில் வண்ணச் சாயம் பூசி, தென்னங்கீற்றுகள், வாழைநார்களால் ஆன ஆடை, அணிகலன்களால் அவர்கள் அலங்கரித்துக்கொள்வார்கள்.
பிறகு அவர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை வாழ்த்தி, அவர்களிடம் இருந்து தானியம், மஞ்சள், தேங்காய் என, என்னகொடுத்தாலும் பெற்றுக்கொள்வார்கள்.
தீயசக்தியை விரட்ட, குடும்பத்துக்கு வரவிருக்கும் துன்பங்களைத் தடுக்க பரிகாரங்களை, சடங்குகளைச் செய்வார்கள்.
களஞ்சாக்களை, மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியாக, தெய்வமாக மக்கள் பார்க்கிறார்கள். களஞ்சாக்கள் தங்கள் வீட்டுக்கு வந்தால் கெட்ட சக்தி நீங்கும், அந்த ஆண்டு விவசாயம் செழிக்கும், நோய்கள் அண்டாது என்பது நம்பிக்கை.
நெல் சாகுபடி ஆடி மாத முடிவில்தான் தொடங்கும் என்பதால், துளு மக்கள் உப்பு கலந்த இலந்தைப் பழத்தையும் சில கீரை வகைகளையும் சாப்பிடுகிறார்கள். அதையே களஞ்சாவிற்கும் கொடுப்பார்கள். வீட்டிற்கு வரும் களஞ்சாவிற்கு அரிசி, தேங்காய், எண்ணெய், காராமணி, மஞ்சள் ஆகியவற்றைக் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது.

