டேராடூன்: உத்தராகண்டில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு மாதக் குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட நால்வர் பலியாகினர்.
தெஹ்ரி மாவட்டம் சம்பாவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு பகுதியில் இருந்த இரு டாக்சி நிலையங்களும் முற்றிலுமாக புதைந்தன. எத்தனை வாகனங்கள் மண்ணில் புதைந்தன என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், தெஹ்ரி - சம்பா இடையேயான சாலை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மண்ணைத் தோண்டி அகற்றும் இயந்திரங்களைக் கொண்டு பாதையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க உத்தராகண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் உத்தராகண்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டேராடூன், பாரீ, நைனிடால், சம்பாவத், பாகேஸ்வர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாள்களுக்குமுன் நிலச்சரிவு காரணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந்திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கிருந்து 17 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து திங்கட்கிழமை கருத்துரைத்த இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் பிரபோகத் சக்சேனா, ‘‘இதுவரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். இன்னும் இருவரின் உடல்கள் உள்ளேயே சிக்கியுள்ளன. அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் சிலரின் உடல்கள் உள்ளேயே சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் அந்த உடல்களையும் மீட்டுவிடுவோம்.
“இப்பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தை சீர்செய்து வருகிறோம். சாலைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன,’’ என்று தெரிவித்தார்.

