எல்லையிலும் சாலைகளிலும் கடுமையான பாதுகாப்பு

பஞ்சாப்: விவசாயிகள்-காவல்துறையினர் மோதலில் ஒருவர் உயிரிழப்பு

எல்லையிலும் சாலைகளிலும் கடுமையான பாதுகாப்பு

2 mins read
a536d25d-aba7-48cb-837d-9f0a8dc18e14
அமிர்தசரஸ் அருகேயுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகரில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக 16 விவசாயச் சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதனையடுத்து, சட்ட, ஒழுங்கைப் பாதுகாக்க 4,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் விவசாயி ஒருவர் மாண்டுபோனார்; குறைந்தது ஐந்து காவலர்கள் காயமடைந்தனர்.

சங்ரூரின் லோங்கோவால் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் அந்த விவசாயி பங்குகொண்டார். அப்போது, விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, டிராக்டர் இழுவை வண்டி ஏறியதில் அவர் இறந்துபோனதாகக் கூறப்பட்டது.

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை எதிர்த்து, ‘கிஷான் மஸ்தூர் சங்கார்ஷ் குழு’ எனும் அமைப்பின் தலைமையில் பல சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

ஆயினும், செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே போராட்டக்காரர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் போராட்ட அறிவிப்பையடுத்து, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, விவசாயிகளைக் கைதுசெய்ததற்கும் விவசாய சங்கத் தலைவர்கள்மீது நடவடிக்கை எடுத்ததற்கும் சிரோமணி அகாலி தளக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களும் இழப்பீடு வழங்கத் தவறிவிட்டது என்றும் அவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்றும் அகாலி தளக் கட்சியின் தலைவர் தல்ஜித் எஸ் சீமா டுவிட்டர் வழியாகச் சாடியுள்ளார்.

இதனிடையே, ஹரியானாவில் ‘பாரதிய கிஷான்’ எனும் விவசாயச் சங்கத்துடன் தொடர்புடையவர்களைக் காவல்துறை தடுத்துவைத்துள்ளதாக அம்மாநில விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்