இன்று மாலை நிலவில் இறங்குகிறது ‘சந்திரயான் - 3’

புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் இறங்குகலத்தை (லேண்டர்) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) அறிவியலாளர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே விக்ரம் இறங்குகலம் தரையிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தில் தடம்பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா.

உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இந்த இலக்கை அடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்யும் பணி விரைவில் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறந்த தருணத்தை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்திய விண்வெளித் திட்டங்களில் இது முக்கியமான ஒன்றாக உள்ளது. கடைசி 20 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

சந்திரயான் -1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலக நாடுகள் நிலவை வேறு மாதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டன என்று அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுவரையிலான நிலவுப் பயணங்கள்

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள் நிலவு என்பதால் அதுகுறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

கடந்த 1958 முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் ஆறு மனிதர்கள் இயக்கியவை. எஞ்சிய பன்னிரெண்டும் ஆளில்லாக் கலங்கள்.

1959ஆம் ஆண்டு முதன் முதலில் எந்திர மனிதனுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966ல் ஆண்டு லூனா-9 ஆய்வுக் கலத்தை அனுப்பி வரலாறு படைத்தது ரஷ்யா.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் லூனா-9, லூனா-13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த படக்கருவிகள் மூலம் நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா சர்வேயர் என்ற திட்டத்தில் 5 ஆளில்லா விண்கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட ஆறு விண்கலங்களையும் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது.

நிலவில் கால்வைத்த முதல் மனிதன்

1969 ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை முதன்முதலில் கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள் சாதனை நொடிகள். அதன்பின் 1972 வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால்பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

தொடர்ந்து, சோவியத் ஒன்றியம், லூனா-16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லா விண்கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்துவரச் செய்தது.

ஜப்பானும் நிலவு குறித்து தனது ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக 2019 டிசம்பர் மாதம் ‘யுடு’ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3வது நாடானது சீனா.

சீனா ஏழுமுறை நிலவுப்பயணங்களை முடித்துள்ளது. 2030ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள்தான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகள். ஆனால், மர்மங்கள் நிரம்பிய நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த நாடும் வெற்றிகரமாகத் தரையிறங்கவில்லை. அந்த வரலாற்றுச் சாதனையை செய்து முடிப்பதற்காகத்தான் சந்திரயான்-3 தயாராக உள்ளது.

சில நாள்களுக்கு முன்பு ரஷ்யாவின் லூனா-25 வெற்றிகரமாக நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதன் பயணம் இடையிலேயே முடிவிற்கு வந்தது.

அந்த மகத்தான சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து முடிக்க உள்ளார்கள். ஏற்கெனவே நிலவில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் இறங்குகலம் நிலவின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் இறங்குகலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகத்தான சாதனையைக் காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!