பெங்களூரு: மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த மார்ச் மாதம், இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
இந்தியப் பயணம் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பில் கேட்ஸ் பகிர்ந்து வருகிறார்.
இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருடன் எடுத்துக் கொண்ட படத்தை லிங்க்டின் தளத்தில் பகிர்ந்து, “இந்தியாவுக்கான எனது பயணத்தில் மாற்றத்திற்கான ஒரு சக்தியை நான் சந்தித்தேன். குஷ்மா தனது உள்ளூர் அஞ்சல் துறையில் அதிசயங்களைச் செய்யும் குறிப்பிடத்தக்க இளம் பெண்,’’ என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
குஷ்மா, பெங்களூருவில் இந்தியா போஸ்ட் வங்கிக் கிளையில் அஞ்சலராக உள்ளார். அவர் வாடிக்கையாளர்களுக்கு மின்னிலக்க வங்கிச் சேவையை கொண்டு சேர்ப்பதை பாராட்டிய பில் கேட்ஸ், இந்தியா மின்னிலக்கக் கட்டமைப்பில் முன்னுதாரண நாடாக உள்ளது என்றார்.
குஷ்மா போன்ற அஞ்சல் துறை ஊழியர்கள் மூலம் மின்னிலக்க வங்கிச் சேவை மக்களுக்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. குஷ்மா நிதிச் சேவையை மட்டுமல்ல, நம்பிக்கையையும் சேர்த்தே தனது சமூகத்துக்கு வழங்குகிறார்,” என்று பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.