ஓடிவந்த கணவரை நாடி வந்த மனைவி; பங்ளாதேஷ் பெண் நொய்டாவில் கண்ணீர்

2 mins read
07dd6d2b-a728-4a0c-810f-071e53f59720
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த பெண் சோனியா அக்தர் , தன் கணவரை நாடி இந்தியாவுக்கு குழந்தையுடன் வந்தார். - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற மாது அண்மையில் தனது குழந்தையுடன் உத்தரபிரதேசத்தின் மத்திய நொய்டா பகுதிக்குச் சென்று அந்தப் பகுதி அருகே சூரஜ்புரில் வசிக்கும் தனது கணவர் சவுரவ் காந்த் திவாரியுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பங்ளாதேஷில் சவுரவ் காந்த் வேலை பார்த்தபோது அவருக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் தாங்கள் இருவரும் அங்கு முஸ்லிம் மதப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் சோனியா அக்தர் காவல்நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் எனது கணவர் சவுரவ் காந்த் இந்தியாவுக்கு ஓடிவந்துவிட்டார். இப்போது என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார்.

“அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. என்னை ஏமாற்றி அவர் திருமணம் செய்துள்ளார்.

“நான் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். என் கணவருடன் வாழ ஆசைப்படுகிறேன்.

“எனவே, என்னை அவருடன் சேர்த்து வையுங்கள். என்னையும், என் குழந்தையின் நிலையையும் பார்த்து அதிகாரிகள் எனக்கு உதவ வேண்டும்.” என்று அந்த மாது கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, சவுரவ் காந்த் திவாரி, டாக்காவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 2017 ஜனவரி 4ஆம் தேதி முதல் 2021 டிசம்பர் 24ஆம் தேதி வரை வேலை பார்த்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பங்ளாதேஷ் மாது தெரிவிப்பது எல்லாம் உண்மை என்பதும் தெரியவந்தது.

சவுரவ் காந்துக்கு இந்தியாவில் ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பங்ளாதேஷ் பெண்மணி தாக்கல் செய்துள்ள புகார் குறித்து விசாரணை தொடங்கிவிட்டதாக நொய்டா கூடுதல் காவல்துறை இணை ஆணையர் ராஜீவ் தீக்சித் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்