மும்பை: வங்கிகளிடமிருந்து கடன்பெற்று முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மீதும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உட்பட 13 வங்கிகளின் அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம், தொலைத் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனம்.
அந்நிறுவனம் நாடு முழுவதும் 27,729 கைப்பேசிக் கோபுரங்களை கொண்டிருக்கிறது.
அது 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று ரூ.4,760 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அந்நிறுவனம் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை, முறையாகப் பயன்படுத்தாமல், போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நிறுவனம் குறிப்பிட்ட சில விநியோக நிறுவனங்கள் அனுப்பிய பொருட்களின் மதிப்பைவிடவும் கூடுதலாக அவற்றுக்கு பணம் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
அந்த விநியோக நிறுவனங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதும் வங்கிகளில் இருந்து பெற்ற கடனை மடைமாற்றவே அந்த போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் உதவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மீண்டும் ஜிடிஎல் நிறுவனத்தின் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த 13 வங்கிகளின் அதிகாரிகள் மீதும் புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.