தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் மோடி: பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆதரவு

2 mins read
c560ad5a-8888-47bc-92e8-7f4f59cc7fe9
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரிக்ஸ் எனப்படும் ஐந்து நாட்டு அமைப்பைக் கருத்திணக்கத்தின் அடிப்படையில் விரிவுபடுத்தி அதை எதிர்காலத்திற்கு ஏற்ற அமைப்பாக மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதன் 15ஆவது உச்சநிலை மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர், சீன அதிபர் உள்ளிட்ட பிரிக்ஸ் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அந்த மாநாட்டில் புதன்கிழமை உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஆக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனைக்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டும். அதை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.

பிரிக்ஸ் அமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் நீண்ட நெடுங்கால பயணத்தைத் தொடங்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கி எப்படி எப்படியெல்லாம் பணியாற்றி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு கடந்த மூன்றாண்டு காலமாக காணொளி வாயிலாகவே நடந்து வந்தது. கொவிட்-19க்குப் பிறகு முதன்முறையாக இப்போதுதான் பிரிக்ஸ் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்கிறார்கள்.

அந்த உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க் நகரைச் சென்றடைந்தபோது அங்கு அவருக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில் திரு மோடி கலந்துகொண்டார்.

அந்த மாநாட்டில் ஈரான், பங்களாதேஷ் நாடுகளை உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஜி20 அமைப்பின் மாநாடுகள் நடந்து வருகின்றன. அதன் உச்சநிலை மாநாடு புதுடெல்லியில் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. அதில் சீன அதிபர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்