2026ல் டெங்கிக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி: இந்திய நிறுவனம் திட்டம்

2026ல் டெங்கிக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி: இந்திய நிறுவனம் திட்டம்

படம்: ஊடகம்

24 Aug 2023 - 6:49 pm

1 mins read

ஹைதராபாத்: தடுப்பூசி உற்பத்தியாளரான “இந்தியன் இம்மியூனாலஜிகல் லிமிடெட்” நிறுவனம், 2026 தொடக்கத்தில் டெங்கிக் காய்ச்சல் தடுப்பூசியை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிடுவதாக அதன் உயர் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கொசுக்களால் பரப்பப்படும் டெங்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சனையாக எழுந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 31,464 பேருக்கு டெங்கி பரவியது. அவர்களில் 36 பேர் உயிரிழந்தனர்.

நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்டச் சோதனையாக ஏறக்குறைய 90 பேரிடம் சோதிக்கப்பட்டது. அவர்களில் யாருக்கும் விபரீத விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. ஆனந்த் குமார் தெரிவித்தார்.

“நாங்கள் முதல் கட்டச் சோதனைகளைப் பூர்த்தி செய்யவிருக்கிறோம். இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். இதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். எனவே, 2026 ஜனவரியில் தடுப்பூசியை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறோம்,” என்றார் டாக்டர் குமார்.

தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான கிருமியை அமெரிக்காவின் தேசிய சுகாதாரக் கழகம் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த நிறுவனம் தவிர, குறைந்தது மேலும் இரு நிறுவனங்கள் டெங்கி தடுப்பூசியைத் தயாரித்து வருகின்றன.

ஹைதரபாத்தைச் சேர்ந்த இம்மியூனாலஜிகல் நிறுவனம், விலங்குகளும் மனிதரும் பயன்படுத்தக்கூடிய தடுப்பூசிகளை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ராய்ட்டர்ஸ்