புதுடெல்லி: மின்வர்த்தகத்தில் சிறிய, பெரிய வர்த்தகர்களிடையே நிலவிவரும் போட்டியை சமநிலைப்படுத்த வேண்டும். அதை உறுதி செய்வது மிக முக்கியம் என்று பிரதமர் நரேந்திரமோடி ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அந்த உரையில் அவர், “உலகமயமாக்கல் கோடிக்கணக்கான மக்களை கடும் வறுமையிலிருந்து மீட்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது.
“தொடர் முயற்சிகள் காரணமாக இந்தியா ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறியுள்ளது. போட்டித்தன்மை அதிகரிப்பு, வெளிப்படைத்தன்மை, மின்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் ஆகியவை காரணமாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியா தனியாக சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களை நிறுவியுள்ளது.
“இந்தியா தொழில்துறை மண்டலங்களை உருவாக்கி, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
“இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு இந்தியா போன்ற எங்களின் முன்முயற்சிகள் உற்பத்திக்கு ஊக்கம் அளித்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.
“அனைத்துலக வர்த்தகம் மற்றும் முதலீடுகளிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு ஜி-20 நாடுகளுக்கு இருக்கிறது.
“மின்னணு வர்த்தகத்திற்கு வெளிப்படையான இணையதளம் என்பது மிகவும் முக்கியம். இது மின்னணு சந்தைச் சூழலை ஜனநாயகப்படுத்தும். ஏற்கெனவே யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
“வர்த்தக ஆவணங்களை மின்மயமாக்குவதற்கான உயர்நிலைக் கொள்கைகளை ஜி-20 நாடுகள் உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
“எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும், சுமைகளைக் குறைப்பதற்கும் இது உதவும். எல்லை தாண்டிய மின்வர்த்தக வளர்ச்சியின் சவால், பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்வதுதான். நாம் இதைக் கூட்டாக செயல்படுத்த வேண்டும்.
“உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலதரப்பு வர்த்தக முறையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

