தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பிரக்யான்

2 mins read
b6cf17dd-fae2-4e57-bd88-16e52f2f34fb
அடுத்த 14 நாள்களுக்கு பிரக்யான் ‘ரோவர்’ நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தில் புதன்கிழமை வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்‌ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் எனும் ‘லேண்டர்’ அங்கம்.

அந்த தரையிறக்கத்தால் ஏற்பட்ட தூசு தணிந்தபின் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து அதில் இருந்த பிரக்யான் எனும் ‘ரோவர்’ கருவியை இஸ்‌ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றினர்.

லேண்டருக்குள் இருந்து சாய்வு தளப் பாதை மூலம் ரோவர் வெளியேறியது. பின்னர் சிறிது, சிறிதாக நகரத் தொடங்கிய அது, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ரோவர் சாதனம் சில மீட்டர் தொலைவிற்கு நகர்ந்ததாகக் கூறப்பட்டது.

பிரக்யானில் பொருத்தப்பட்டிருக்கும் ஏபிஎக்ஸ்எஸ் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள்களின் சேர்க்கை ஆய்வு செய்யப்படும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் எந்த அளவு காணப்படுகிறது என்பதையும் அது அளவிடும்.

பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியின் பெயர் லிப்ஸ். இது நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டேசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம் போன்ற கனிமங்களின் அளவை ஆய்வு செய்து தகவல் அனுப்பும்.

ஹைட்ரஜன் தயாரிக்கவும் நிலவில் உயிர்வாயு (ஆக்சிஜன்) உருவாக்கவும் சுரங்கப் பணிகள், செவ்வாய்க் கோளுக்கான பயணம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தத் தென்துருவ ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, ‘லேண்டர்’ சாதனமான விக்ரமும் நிலவின் மேற்பரப்பு வெப்ப மாறுபாடுகள் உள்ளிட்ட சில ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் தகவல்களையும் இந்த சாதனங்கள் வழங்க உள்ளன.

விக்ரம், பிரக்யான் இரண்டுமே அடுத்த 13 நாள்களுக்குத் தொடர்ந்து ஆய்வு செய்யும். இவற்றின் ஆயுள் 14 நாள்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆர்பிட்டரும் சந்திரயான்-3 உந்துவிசை கலனும் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகளுக்கு சந்திரனைச் சுற்றி வரும். இவற்றின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-4 திட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்