புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் இறங்குகலம் (லேண்டர்), நிலவில் தரையிறங்குமுன் எடுத்த படங்களைத் தொகுத்து இரண்டு நிமிடக் காணொளியாக வெளியிட்டுள்ளது இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ).
தனது டுவிட்டர் பக்கத்தில் அக்காணொளியைப் பகிர்ந்துகொண்ட இஸ்ரோ, “நிலவில் தரையிறங்குமுன் விக்ரம் இறங்குகலத்தின் புகைப்படக் கருவி எடுத்த படங்கள் இதோ,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேடுபள்ளங்களுடன்கூடிய நிலவின் மேற்பரப்பை இறங்குகலத்தின் புகைப்படக்கருவி படம்பிடித்துள்ளது.
இதனிடையே, சந்திரயான்-3 விண்வெளி ஆய்வு தொடர்பான அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன என்றும் அனைத்துக் கருவிகளும் சரியாக இயங்குகின்றன என்றும் இஸ்ரோ வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
நாற்பது நாள் பயணத்திற்குப் பிறகு இம்மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை மாலையில் விக்ரம் இறங்குகலன் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது.
இதனைச் சாதித்த முதல் நாடு இந்தியாதான். இதற்குமுன் நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு நாட்டின் விண்கலமும் இறங்கியதில்லை.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய நாடு என்ற பெருமையையும் இந்தியா தேடிக்கொண்டது.