லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் மாண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் புதன்கிழமையன்று ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர்.
டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏறத்தாழ 50 பேர் இருந்தனர். தாஜ்புரா என்ற கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்தார்.
இதையடுத்து, அது கால்வாயில் கவிழ்ந்தது. அப்போது கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை மாலை கால்வாயிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடியவிடிய மீட்புப் பணிகள் நடந்தன.
வியாழக்கிழமை காலை கால்வாயில் இருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை ஒன்பது பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஒன்பது பேரில் 4 பேர் சிறுவர்கள். மேலும் பலரைக் காணவில்லை என்றும் அவர்களின் கதி என்ன என்பது குறித்தும் தெரியவில்லை. எனவே மரண எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

