பிரசவத்தின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு

1 mins read
50842406-c265-4d11-bedf-fef10cf727ab
-

திருப்பதி: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15ஆம் தேதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

ரோஜாவிற்கு சுகப்பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் கிருஷ்ணா என்பவர் ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தார்.

பின்னர் தையல் போடும்போது வயிற்றில் தெரியாமல் பஞ்சை வைத்து தைத்துவிட்டார். மூன்று நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தது முதல் ரோஜாவுக்கு கடும் வயிற்றுவலி மற்றும் தையல் போட்ட இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இதனை கண்டு பதறிப்போன ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரோஜாவின் வயிற்றை ஸ்கேன் செய்த பார்த்தபோது வயிற்றில் பஞ்சு இருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த டாக்டர் கிருஷ்ணா ரோஜாவை சிகிச்சைக்காக அவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ரோஜாவுக்கு ரத்தக்கசிவு நிற்கவில்லை.

இதையடுத்து ரோஜாவை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா பரிதாபமாக இறந்தார். ரோஜாவின் உறவினர்கள் அவரது உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்