சீனா – இந்தியா எல்லைப் பிரச்சினை குறித்து ஸி – மோடி பேச்சுவார்த்தை

2 mins read
b536ea07-1592-473f-ae7c-ed6d6248c7d5
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இறுதி நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. உடனிருப்பவர்கள் பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேருக்குநேர் சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்து “மனம்திறந்து” பேசியதாக சீன வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டுக்கு இடையே, திரு மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தச் சந்திப்பு வியாழக்கிழமை நிகழ்ந்தது.

சென்ற 2020ஆம் ஆண்டு, இமாலய எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் குறைந்தது நான்கு சீன வீரர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பிரச்சினை எழுந்தது.

எல்லையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் திரட்டப்பட்டுள்ளனர். இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் 19 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் பிரச்சினை தீரவில்லை.

இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே தென்னாப்பிரிக்காவில் அரிய சந்திப்பு நடந்துள்ளது.

இது குறித்து தகவலளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் க்வத்ரா, லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் பற்றி திரு மோடி பேசியதாகத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருப்பதற்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மதிக்கப்படுவது அவசியம் என்றும் திரு மோடி கூறியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டால் இரு நாடுகளும் மக்களும் நன்மை அடைவார்கள் என்று அதிபர் ஸி வலியுறுத்தினார்,” என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

“இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு, அமைதியைக் கூட்டாக நிலைநாட்ட எல்லைப் பிரச்சினையை சரியான முறையில் கையாளவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினை தலையெடுத்த பிறகு, அதிபர் ஸியும் பிரதமர் மோடியும் பல்வேறு அரசதந்திரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த நவம்பர் மாதம் பாலியில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டின்போது நிகழ்ந்த சுருக்கமான சந்திப்புக்குப் பிறகு இருவரும் நேருக்குநேர் சந்தித்துப் பேசியிருப்பது இதுவே முதல்முறை.

இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டபிறகு, இந்தியப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை கிரீஸ் நாட்டுக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்