2024 தேர்தலிலும் மோடிக்கே வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவு

2 mins read
b18f3459-e8eb-4f81-bf4e-c270c788c1a7
தனிப்பட்ட செல்வாக்கால் அடுத்த தேர்தலிலும் மோடியே வெல்வார் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இந்திய வாக்காளர்களிடம் குறைந்து வருகிறது.

ஆயினும், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் 2024 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைப்பார் என முன்னணி ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் செல்வாக்கு கூடத் தொடங்கியுள்ளது என்றும் 26 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இண்டியா’ அடுத்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் என்றும் ‘இந்தியா டுடே’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இருப்பினும், அடுத்த பிரதமருக்கான போட்டியில் ராகுலைவிட பிரதமர் மோடி முன்னிலையில் இருப்பதாக அந்தக் கருத்தாய்வு கூறுகிறது.

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், மொத்தமுள்ள 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரதமர் மோடியின் பாஜக 287 தொகுதிகளில் வெற்றிபெறும் என அக்கருத்தாய்வு முடிவுகள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்குமுன் பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக சென்ற ஜூலை மாதம் இந்தியாவில் சில்லறைப் பணவீக்கம் 7.44 விழுக்காடாக ஏற்றம் கண்டது. குறிப்பாக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப்பொருள்களின் விலை 11.5 விழுக்காடு கூடியது.

உலகில் ஆக வேகமாக வளரும் பொருளியலைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இந்தியாவின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 8 விழுக்காடாக நீடிக்கிறது. அண்மைய மாதங்களில் அதுவே அரசுக்கு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் புதிதாக 70 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் 24 மில்லியன் வேலைகளே உருவாக்கப்படலாம் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் இம்முறை 160,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 59 விழுக்காட்டினர் மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இவ்வாண்டு ஜனவரியில் இவ்விகிதம் 67 விழுக்காடாக இருந்தது.

அதேபோல, பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகக் கடந்த ஜனவரியில் 72 விழுக்காட்டினர் தெரிவித்திருந்த நிலையில், இப்போது அது 63 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், அவரது செயல்பாடு மோசம் எனக் கூறியோர் விகிதம் 16 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்ட ராகுல் காந்தியால்தான் முடியும் என்று 32 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். கடந்த நாலாண்டுகளில் இதுவே அவருக்குக் கிடைத்த அதிகமான ஆதரவு.

அடுத்த பிரதமராக ராகுலே பொருத்தமானவர் என்று ஜனவரியில் 13 விழுக்காட்டினர் கூறியிருந்த நிலையில், இப்போது 24 விழுக்காட்டினர் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்