விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் உள்ள டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் கடையில் கடந்த புதன்கிழமை தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின. அங்கு நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு மாடிக் கட்டடத்தைக் கொண்ட அந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக் கடையில் முதல் மாடியில் பற்றிய தீ மளமளவென இரண்டாவது மாடியில் உள்ள மோட்டார் சைக்கிள் கிடங்குக்கும் பரவியது. தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ கட்டடம் முழுவதும் பரவியிருந்தால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலாகியிருக்கும்.
இந்தத் தீ விபத்து குறித்த விசாரணையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீப்பற்றத் தொடங்கி மேல் மாடிக்குப் பரவியதாகத் தெரிய வந்துள்ளது.
இதுபோல் 2022 செப்டம்பர் 12ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரூபி ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இதன் கீழ்த் தளத்தில் மின்சார மோட்டார் சைக்கிள் விற்பனைக் கடை உள்ளது. அன்று நள்ளிரவில் மின்சார மோட்டார் சைக்கிள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அதன் விடுதியில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

