சரத் பவார் பல்டி

சரத் பவார் பல்டி

2 mins read
b9c850ce-03b9-4801-a49d-fd696d4cc807
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருடன் அவருடைய உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார். - படம்: இந்திய ஊடகம் 

மும்பை: மகாராஷ்டிராவின் அரசியல் களம் வெள்ளிக்கிழமை மேலும் சூடுபிடித்தது. அஜித் பவார்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று தான் ஒருபோதும் கூறியது கிடையாது என்று சரத் பவார் தெரிவித்துவிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் மீண்டும் சேர முடியாத அளவுக்கு கதவைச் சாத்திவிடும் யோசனை தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, புனே மாவட்டத்தில் உள்ள தன் சொந்த கிராமமான பாராமதியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “தேசியவாத காங்கிரசில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த தலைவராக அஜித் பவார்தான் உள்ளார்,” என்று கூறியிருந்தார். ஆனால், மறுநாளே பல்டி அடிப்பது போல தலைகீழாக மாற்றிக் கூறியிருக்கிறார்.

சரத் பவாரின் இந்த அறிவிப்பை மகாராஷ்டிராவின் எதிர்த்தரப்பும் ஆளும் பாஜகவும் அவரவர் கண்ணோட்டங்களில் பார்க்கத் தொடங்கிவிட்டன.

“விரைவில் சரத் பவார் பாஜக கூட்டணியில் சேர்ந்துவிடுவார். அதனால்தான் அவர் இப்படி அறிவிப்பு விடுக்கிறார்,” என்று பாஜக தரப்பு தெரிவித்து இருக்கிறது.

அதே வேளை, சரத் பவார் பாஜகவை குழப்பிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறார் என்று மகாராஷ்டிரா எதிர்த்தரப்பு வாதிடுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் எட்டு பேரும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்துவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், சரத் பவாரின் பேச்சு இடம்பெற்று இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்