புதுடெல்லி: உலகில் வரும் 2030ஆவது ஆண்டு வாக்கில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியா, சீனா, இந்தோனீசியா ஆகிய மூன்று நாடுகளில்தான் வேலை பார்க்கும் வயதில் உள்ள மக்கள் அதிகம் இருப்பார்கள் என்று உலகளாவிய நிர்வாக ஆலோசனை அமைப்பான மெக்கின்சே கணித்துள்ளது.
பொருளியல் கிழக்கு நாடுகளை மையம் கொண்டு செயல்படும் நிலைக்குத் திரும்பும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
‘ஜி20 பொருளியல்களில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான, எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முயற்சி’ என்ற அறிக்கையை சனிக்கிழமை அந்த அமைப்பு வெளியிட்டது.
உலகம் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கும் நிலை முன்பைவிட இப்போது வலுவடைகிறது.
மின்னிலக்கம், கணினித் தகவல் புழக்கம் போன்றவை தொடர்புகளும் அறிவும் பகிர்ந்துகொள்ளப்படுவதை வேகப்படுத்துகின்றன என்று மெக்கின்சே தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் பொருளியல் மையங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் ஜி20 பொருளியல்கள், பருவநிலையைக் கட்டிக்காப்பதிலும் எல்லாரையும் உள்ளடக்கும் நிலையைச் சாதிப்பதிலும் பலவித போக்குகளைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போது கடன் ஆக அதிக உச்சத்தில் இருக்கிறது.
ஜி20 நாடுகளைப் பார்க்கையில் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடைப்பட்ட விகிதாச்சாரம் 300%க்கும் அதிகமாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆக பணக்காரர்களாக இருக்கின்ற 10% மக்களுக்கும் அடித்தட்டு நிலையில் இருக்கின்ற 50% மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி, 20ஆம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு இப்போதுதான் ஆக அதிகமாக இருக்கிறது.
சீனாவும் இந்தியாவும் ஜி20 நாடுகளின் வளர்ச்சி இயந்திரங்களாகத் திகழ்கின்றன. இருந்தாலும் எல்லாரையும் உள்ளடக்குதல், சுற்றுச்சூழல் என்று வரும்போது இதர நாடுகள் சிறந்த நிலையில் இருக்கின்றன.
ஆயுள், வங்கிக் கணக்குகளுடன் கூடிய மக்களின் அளவு போன்றவற்றைப் பார்க்கையில் ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கொரியா ஆகியவை நல்ல முன்னிலையில் உள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஒட்டுமொத்த அடிப்படையில் பார்க்கையில், ஜி20 நாடுகளின் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அல்லது 2.6 பில்லியன் மக்கள் பொருளியல் சக்தி வரம்புக்குக் கீழே வசிக்கிறார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களில் 100 மில்லியன் மக்கள் மிக ஏழ்மையில் வாழ்கிறார்கள் என்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

