இந்தியா அரிசி ஏற்றுமதி தடை இறுகுகிறது; புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி

2 mins read
78ab3096-5044-4f50-bc8e-b914804049f9
உலக அரிசி ஏற்றுமதியில் 40%க்கு இந்தியா பொறுப்பு வகிக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்தியா புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% தீர்வை விதித்துள்ளது. இது உடனடியாக நடப்புக்கு வந்துவிட்டது.

உலகில் அரிசியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை இறுகுவதால் உலக அளவில் அரிசி விலை இன்னும் கூடும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசியின் விலை உயர்ந்துள்ளது.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதாவது இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, புழுங்கல் அரிசியின் நுகர்வு அதிகரித்தது. இதனால் அதன் விலையும் வெகுவாக உயர்ந்தது. மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசியின் அளவு பெரும் வளர்ச்சி அடைந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 7.4 மில்லியன் டன் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், ஐக்கிய நாடுகளின் உணவு முகமையின் அரிசி விலைக் குறியீடு, ஏறக்குறைய 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளால் பல நாடுகளிலும் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது.

உலக அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. கடந்த ஆண்டு உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ஒழுங்கற்ற வானிலை காரணமாக அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்த நிலையில் இந்தியா பாசுமதி அல்லாத அரிசிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசு கடந்த மாதம் விதித்த கட்டுப்பாடுகளினால் அரிசியின் விலை 25% வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு இனி வரும் நாட்களிலும் தொடரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு பருவமழையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அரிசி உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

அரிசி ஏற்றுமதி மட்டும் இல்லாமல் கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்