சண்டிகார்: ஹரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் மீண்டும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஊர்வலம் நடத்த வலதுசாரி அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை முடிவு செய்துள்ளன.
அதையடுத்து அங்கு சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு கைப்பேசி இணையத் தொடர்புகளை நிறுத்துவதற்கு அம்மாநிலம் முடிவுசெய்துள்ளது. எனவே, நூ மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கைப்பேசி இணைய வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை சனிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சமூக வலைதளங்களின் மூலம் வன்முறையைத் தூண்டும் வகையில் தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதைத் தடுக்கும் வகையில் நூ மாவட்டத்தில் கைப்பேசி இணையச் சேவைகள் நிறுத்தப்படும். பொதுமக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், தனிநபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி, மொபைல் ரீச்சார்ஜ், வங்கி எஸ்எம்எஸ் வசதி, அகண்ட அலைவரிசை மூலம் வழங்கப்படும் இணையச் சேவை, நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் இணையச் சேவை நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊர்வலம் குறித்து விஎச்பியின் இணைச் செயலாளர் சுரேந்தர் ஜெயின் கூறியதாவது: “நாங்கள் தீர்மானித்தபடி எங்களின் ஊர்வலத்தை மீண்டும் தொடங்க இருக்கிறோம். அது எங்களின் உரிமை. அதன்படியே நாங்கள் இதனை திட்டமிட்டுள்ளோம்.
“எங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவது மாநில அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு. அவர்கள் எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
“வேண்டுமென்றால் நாங்கள் ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஊர்வலம் நடத்துவதை நிறுத்த மாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார். இதனால் நூ மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

