பெங்களூரு: கர்நாடக மாநிலம் தாவனகெரே மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையின் 40 அடி உயர சுற்றுச்சுவரையும் தாண்டி தப்பிச் சென்றார் ஒரு கைதி.
திரைப்பட பாணியில் நடைபெற்ற சம்பவம் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
வசந்த் என்னும் 23 வயது இளைஞர், பாலியல் பலாத்காரக் குற்றம் தொடர்பில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு அந்தச் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறிய வசந்த் 40 அடி உயர சுவரிலிருந்து வெளியே குதித்து தப்பினார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் காலில் அடிபட்ட நிலையிலும் ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டே நடந்து சென்று ஆட்டோ ஒன்றில் ஏறி தலைமறைவானார்.
இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த சிறை அதிகாரிகள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் அளித்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்திற்குள் வசந்த் சிக்கினார். தற்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் கடுங்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

