நடுவானில் மூச்சிழந்த சிறுமி; போராடி உயிர்காத்த மருத்துவர்கள்

2 mins read
340aa448-087f-47ed-be01-9d1da9730dc7
சிறுமி பயணம் செய்த அதே விமானத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஐந்து மருத்துவர்கள் பயணம் செய்தனர். நெருக்கடி நேர்ந்தபோது அவர்கள் விரைந்து செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காத்தனர். - படம்: எய்ம்ஸ் மருத்துவமனை
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் இரண்டு வயதுச் சிறுமி ஒருவர் வியக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளார்.

நேற்று பெங்களூரில் இருந்து புதுடெல்லி சென்ற விஸ்தாரா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறுமியின் மூச்சு நின்றுவிட்டது.

விமானப் பணியாளர்கள் அதுகுறித்து அறிவித்த வேளையில், அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர்கள் ஐவர் உடனடியாக உதவிக்கு விரைந்தனர்.

டாக்டர் நவ்தீப் கோர், டாக்டர் தாமன்தீப் கோர், டாக்டர் ரிஷப் ஜெயின், டாக்டர் ஓய்ஷிகா, டாக்டர் அவிச்சலா தக்சஸ் எனும் அந்த மருத்துவர்கள் புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள்.

சம்பவம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட பதிவில், “மருத்துவர்கள் ஐவரும் பெங்களூரில் நடைபெற்ற மருத்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதுடெல்லி திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் திடீரென்று மருத்துவ உதவிகோரி அழைப்பு விடுக்கப்பட்டது.

“இரண்டு வயதுச் சிறுமியின் உதடுகளும் கைவிரல்களும் நீலம் பாரித்திருந்தன. குழந்தையைப் பரிசோதித்தபோது அவளுக்கு நாடித் துடிப்பு இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அக்குழந்தை மூச்சு விடவில்லை,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விமானத்தினுள் குறைவான மருத்துவ வசதிகளே இருந்தபோதும் மருத்துவர் குழு உடனடியாக, இதயச் செயல்பாட்டை மீட்கும் சிகிச்சையை அளித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நிலைமை மேலும் சிக்கலானது. ஆனால் மருத்துவர்கள் போராடி அக்குழந்தையின் உயிரைக் காத்தனர்.

“விமானம் நாக்பூருக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு சீரான உடல்நிலையுடன் அவள் குழந்தை மருத்துவ நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டாள்,” என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்