போபால்: மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை மற்றும் பெண்ணை நிர்வாணமாக்கிய சம்பவங்களின் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சார் மாவட்டம் பரோடியா நானார்கிர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் தாக்குர், 28.
இவர் தமது பகுதியில் வசித்து வரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் சார்பில் விக்ரம் சிங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து விக்ரம் சிங் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது.
சிறிது நாளில் பிணையில் வெளியில் வந்த விக்ரம் சிங், தலித் குடும்பத்தினரிடம் தனக்கு எதிராகத் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். இதனால் விக்ரம் சிங் கடும் கோபமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, விக்ரம் சிங் தமது குடும்பத்தைச் சேர்ந்த சிலருடன் அந்த தலித் குடும்பம் வசிக்கும் வீட்டுக்குச் சென்றபோது பாதிக்கப்பட்ட இளம்பெண் தமது தாயுடன் இருந்தார். அவர்களிடம் வழக்கை திரும்பப் பெறும்படி விக்ரம் சிங் வற்புறுத்தினார்.
ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டைச் சூறையாடிவிட்டு அங்கிருந்து சென்றனர். அப்போது அங்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரரான நிதின் அஹிர்வார் என்னும் 18 வயது இளைஞர் நின்றிருந்தார். அவரையும் கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
மகன் நிதினைக் காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணின் தாயாரின் ஆடைகளை அந்தக் கும்பல் களைந்து நிர்வாணமாக்கியதோடு நிதினை தொடர்ந்து கொடூரமாகத் தாக்கிவிட்டுச் சென்றது. நிதின் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் விக்ரம் சிங் உள்பட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான கோமல் சிங் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.