திருவனந்தபுரம்: நிலவில் கால் பதித்த இந்தியாவால் செவ்வாய், வீனஸ் கிரகங்களையும் தொடமுடியும் என்று இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 இறங்குகலம் கடந்த புதன்கிழமை தரையிறங்கியது. இந்தத் திட்டத்தின் வெற்றியில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் வகையில் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி மையம்’ என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே சாவடிநடை பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய சோம்நாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்குப் பதிலளித்த சோம்நாத், “அறிவியல் வேறு, ஆன்மிகம் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைக்கக்கூடாது. இந்தியாவின் இறங்குகலம் இறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிட்டதில் எந்தத் தவறும் இல்லை.
“நிலவின் தென்துருவத்தில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்துள்ளன. இதில் நூலிழை தவறு ஏற்பட்டால்கூட அந்தப் பகுதியில் விக்ரம் இறங்குகலத்தைத் தரையிறக்க முடியாது. இந்த மாபெரும் சவாலில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.
“அந்த தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். செவ்வாய், வீனஸ் கிரகங்களிலும் நம்மால் கால் பதிக்க முடியும். இதற்கு இந்திய விண்வெளித் துறையில் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும்,” என்று கூறினார்.