கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் திட்டம் தொடங்கியது

கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் திட்டம் தொடங்கியது

2 mins read
737a0c32-6b39-43c9-b5c5-dece3e473386
கர்நாடக முதல்வர் சித்தராமையா. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கும் ‘குடும்பலட்சுமி’ நிதியுதவித் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்ட முக்கிய ஐந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றான கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் ‘குடும்பலட்சுமி’ திட்டம். அந்தத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்.

இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பின்னர் முதல் அமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களால் உத்தரவாதத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

“குறிப்பாக நிதி நிலையை கூறி அரசு திவால் ஆகிவிடும் என்று கூறினர். ஆனால் நாங்கள் வெற்றிகரமாக 5 வாக்குறுதி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

“ஏற்கெனவே சக்தி, கிரகஜோதி, அன்ன பாக்ய ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி உள்ளோம். இது நாங்கள் அமல்படுத்தும் நான்காவது திட்டம் ஆகும். கர்நாடகாவில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடிவரும் இளையர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமான ‘யுவ நிதி’ விரைவில் அமல்படுத்தப்படும்,” என்றார்.