புதுடெல்லி ஜி20 கூட்டத்தைதவிர்க்கும் சீன அதிபர் ஸி

புதுடெல்லி ஜி20 கூட்டத்தைதவிர்க்கும் சீன அதிபர் ஸி

2 mins read
447d9d5c-b761-4472-8168-4b5c859f903f
தென்னாப்பிரிக்காவின் ஜோகனாஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ் கோப்புப் படம்

புதுடெல்லி-பெய்ஜிங்: இந்தியாவில் இந்த மாதம் நடக்கும் ஜி20 உச்சநிலைக் கூட்டத்தை சீன அதிபர் ஸி ஜின்பிங் தவிர்த்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியா, சீனா இரண்டு தரப்புகளையும் சேர்ந்த தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அந்தக் கூட்டம் நடக்கிறது.

அதில் சீனப் பிரதமர் லி சியாங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சீனாவில் பணியாற்றும் இந்திய அரசதந்திரியும் இரண்டு இந்திய அதிகாரிகளும் ஜி20 அமைப்பைச் சேர்ந்த வேறு ஒரு நாட்டின் அரசுக்குச் சேவையாற்றும் அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர்.

என்றாலும் இந்தியா, சீனாவின் வெளியுறவு அமைச்சுகள் இதன் தொடர்பில் வாயைத் திறக்கவில்லை.

புதுடெல்லி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்துகொள்கிறார். அந்தக் கூட்டத்தை ஒட்டி அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் சந்திக்கக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் இது இனி சாத்தியமா என்பது தெரியவில்லை.

இந்த இரு தலைவர்களும் இதற்கு முன்னதாக இந்தோனீசியாவின் பாலியில் கடந்த நவம்பரில் சந்தித்தனர்.

புதுடெல்லி கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ரஷ்யாவின் அதிபர் புட்டின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

தனக்குப் பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கலந்துகொள்வார் என்றும் அதிபர் புட்டின் தெரிவித்து இருக்கிறார்.

இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த இந்தியாவைச் சேர்ந்த மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், சீன அதிபருக்குப் பதில் அந்த நாட்டின் பிரதமர்தான் மாநாட்டில் கலந்துகொள்வார் என்பது தங்களுக்குத் தெரியும் என்றார்.

சீன அதிபர் புதுடெல்லி கூட்டத்தைப் புறக்கணிப்பது பற்றி தெரிவித்த அதிகாரிகள் அதற்கான காரணத்தைப் பற்றி எதையும் கூறவில்லை.

அமெரிக்காவின் உயர்நிலைத் தலைவர்கள் அண்மையில் சீனாவுக்குச் சென்று இருந்தனர்.

அவற்றின் விளைவாக அமெரிக்க- சீனத் தலைவர்கள் சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெறும் வாய்ப்பு இருக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் வரும் நவம்பர் 12 முதல் 18 வரை ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

அதில் சீன, அமெரிக்கத் தலைவர்கள் நேரடியாக சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

சீனா, கொவிட்-19 கட்டுப்பாடுகளை இந்த ஆண்டில் திடீரென்று அகற்றியது. அதற்குப் பிறகு சீன அதிபர் அவ்வளவாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதில்லை.

இருந்தாலும் சென்ற வாரம் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதமருடன் சீன அதிபர் பேச்சு நடத்தினார். இரு தரப்பு உறவில் நிலவும் பதற்றங்களைக் குறைப்பது பற்றி இருவரும் பேசினர்.

குறிப்புச் சொற்கள்