அதானி குழுமத்தில் ரகசிய முதலீட்டாளர்கள்; தகவல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை

அதானி குழுமத்தில் ரகசிய முதலீட்டாளர்கள்; தகவல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை

2 mins read
5a5c99d3-229a-46e2-821b-40741c5dd769
அதானி குழுமத்தின் பங்குகளில் ரகசிய முதலீடுகளைச் செய்த இரண்டு பேரின் அடையாளம் வெளியிடப்பட்டு இருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ் 

மும்பை: இந்தியாவின் அதானி குழுமத்தில் பங்குகள் வாங்கியவர்கள் யார் என்பதை புதிய ஒரு புலன்விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் அதானி குமுத்திற்குப் பதிய தலைவலியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதானி குழுமம் நிறுவன தில்லுமுல்லு காரியங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் பங்கு விலைகளை வேண்டுமென்றே அதிகப்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ தெரிவிக்கிறது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளைச் சேர்ந்த திரு நாசர் அலி ஷாபான் அஹ்லி என்பவரும் தைவானைச் சேர்ந்த திரு சாங் சுங்-லிங் என்பவரும் பல ஆண்டு காலமாக மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள அதானி குழுமத்தின் பங்குகளை வர்த்தகம் செய்து வந்திருக்கிறார்கள்.

திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல், ஊழல் அம்பல செயல்திட்ட அமைப்பு (ஓசிசிஆர்பி) என்ற ஓர் அமைப்புக்கு கிடைத்த ஆவணங்கள் மூலம் இது தெரியவந்து இருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

அந்த இருவரும் மொரிஷியஸ் நாடு வழியாக அதானி நிறுவனங்களின் பங்குகளில் ரகசியமாக மில்லியன் கணக்கான டாலர் பணத்தை முதலீடு செய்து இருப்பதாக ஓசிசிஆர்பி கூறுகிறது.

அந்த இரண்டு பேரும் அதானி குழுமத்துடன் நீண்டகால வர்த்தகத் தொடர்பை கொண்டிருப்பவர்கள் என்று ஓசிசிஆர்பி அதன் இணையத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது.

அந்த இருவரும் அதானி குழும நிறுவனங்களின் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள்.

அதானி குழுமத்தை நிறுவியவரான கவுதம் அதானி என்பவரின் சகோதரரான வினோத் அதானியுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் அந்த இருவரும் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கிறது.

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து அதானி நிறுவனங்களின் பங்குகளின் விலை மிகவும் குறைந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்