புதுடெல்லி: இந்தியப் பொருளியல், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஆக அதிக வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
சேவை, உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி இதற்குக் காரணம்.
இருப்பினும் அடுத்து வரும் மாதங்களில் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில், சென்ற காலாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 விழுக்காடாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய காலாண்டில் அது 6.1 விழுக்காடாகப் பதிவானது. 2022ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்குப் பிறகு ஆக அதிக வேகத்தில் பொருளியல் வளர்ச்சி கண்டதை அது குறிக்கிறது.
சீனா உள்ளிட்ட உலகின் முக்கியப் பொருளியல்கள் திணறியபோதும் இந்தியப் பொருளியல் வளர்ச்சி காண்பதற்கு சேவைத் துறையில் ஆக வலுவான வளர்ச்சி பதிவானது முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில், உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்தர நிதியை முதற்கட்டத்திலேயே வழங்குகிறது மத்திய அரசு. இந்த நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட 10 டிரில்லியன் ரூபாய் (ஏறத்தாழ $163.4 பில்லியன்) நிதியில் கிட்டத்தட்ட 28 விழுக்காடு, முதல் மூன்று மாதங்களிலேயே செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருள்களின் விலையில் வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் பொருளியல் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்று பொருளியலாளர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்தது. ஆனால் ஆகஸ்டில் வறண்ட சூழலே நிலவியது. இதனால் முதன்மை உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மக்களின் விருப்பச் செலவினங்கள் குறைந்தன என்பதை அவர்கள் சுட்டினர்.
வறண்ட வானிலை வேளாண் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். இந்தியாவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர் வேளாண்மை மூலம் ஈட்டும் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.
உலகளாவிய நிலையில் பொருளியல் வளர்ச்சி மெதுவடைவதையும் ஓர் ஆண்டுக்குமுன் அதிக வளர்ச்சி விகிதம் பதிவானதையும் வைத்துப் பார்க்கையில், அடுத்த சில காலாண்டுகளில் இந்தியப் பொருளியல் வளர்ச்சி தணியக்கூடும் என்று கருதப்படுகிறது.

